(36) (சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர்தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
(37) (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை"
(38) பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
(39) நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(40) (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்; "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?" என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
(41) "அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.
(42) (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
(43) நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
(44) அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.