(119) அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
(120) (முஃமின்களே!) "வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
(121) எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
(122) மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
(123) மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
(124) அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.