(147) நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
(148) (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் "அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்" என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
(149) "நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்" என்று நீர் கூறும்.
(150) "நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
(151) "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.