الأنعام Al-An'aam
(1) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
(2) அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்;, இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது. அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
(3) இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
(4) (அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
(5) எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
(6) அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
(7) காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், "இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.
(8) (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.