(152) அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
(153) நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
(154) நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).
(155) (மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
(156) நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
(157) அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.