(95) நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
(96) அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
(97) அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
(98) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
(99) அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெள; வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(100) இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
(101) அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.